Wednesday, 22 December 2010

மனத்தூறல்கள்..



கிழிக்கப்பட்ட தாள்களில்

வரையப்பட்ட ஓவியமாய்

உடைந்த சிதைவுகளில்

செதுக்கப்பட்ட சிற்பமாய்

அதிகாலை கனவில்

அவளின் அருகாமை

வீணாய் போனது

விடியலின் பொழுது



விரிக்காத படுக்கை

மடிக்காத உடைகள்

வேண்டாத உணவு

தீண்டாத தேநீர்

காலையை தின்று

மதியம் கொன்றது

மங்கையின் நினைவு

மரண வலியாய்



தனிமை பயணத்தின்

ஒவ்வொரு தரிப்பிலும்

தடுக்கி விழுந்து

மீண்டும் தொடர்ந்து

கற்பனைகளில் சுழன்ற

சுந்தர வதனம்

கூரிய வாள்முனை

குரல்வளை அறுப்பதாய்

வேதனை தந்தது



அந்தி சாய்ந்து

ஆதவன் அணைகையில்

மெல்லத் தவழ்ந்து

கள்ளம் கலந்து

கொல்லத் துடித்த

கொள்ளை அழகில்

உருகி வழிந்தது

உயிரின் துளிகள்



இருள் கவிந்த

இரவுப் பொழுது

இன்னும் அதிகமாய்

இம்சை செய்தது

மொட்டவிழ்ந்த

மல்லிகை வாசமாய்

மோகம் வந்து

ஏக்கம் வளர்த்தது



மெல்லப் புரண்டு

விழி மூடுகையில்

சின்னதாய் ஆசை

சிறகு விரித்தது

மறுநாள் கனவிலும்

அவள் வரவேண்டும்