Wednesday 29 September 2010

நீதானா அவள்..


சந்திர ஒளிதனில்

சுந்தர விழிகளால்

மந்திரம் இல்லாமலொரு

தந்திரம் செய்ததென்ன..


அந்த இந்திரஜாலத்தில்

என்னைத் தொலைத்து

இன்னும்

இதயம் வலிப்பதென்ன..


மாலை மயக்கத்தில்

தேன்சுவை இதழ்களால்

தீஞ்சுவை போலொரு

வார்த்தை வடித்ததென்ன..


அந்தக் காவியவார்த்தை

கண்களைக் கட்டி

காலங்கள் தோறும்

கண்ணீர் விடுவதென்ன..


காரிருள் வேளை

மோகத்து முன்னிரவில்

மேகம்போல் மென்மையாய்

காதல் வரைந்ததென்ன..


அந்தக் காதல்கவிதை

காணாமல் போய்

வாழ்வில்

வருந்தித் துடிப்பதென்ன..



Sunday 19 September 2010

நல்லதோர் வீணை செய்து...


வாரஇறுதி விடுமுறைகூட

வருடங்களின் பின்புதான்

ஓய்வின்றிய உழைப்பில்..


தொலைந்து மறையும்

தொலைதூர உறவுகள்

தொலைபேசி அழைப்பில்..


முழுநாளும் வேலைக்குள்

தடம்மாறும் நண்பர்கள்

முகம்பார்க்க முடியாமல்..


தொலைவில் இருந்து

தொலைபேசிக்குள்ளே

குடும்பம் நடத்தி..


தூங்கியெழ மட்டும்

வீடுவந்து செல்லும்

குடும்பத்து உறவுகள்..


பம்பரமாய் உழைக்கும்

பரதேசி வாழ்க்கையின்

பாழாய்போன கொள்கை..


பசிக்கும்போது உணவு

களைத்தபோது தூக்கம்

கிடைத்தாலே போதும்..


வருஷங்களுடன் சேர்த்து

வாழ்க்கையை தொலைக்கும்

வலிமையான வட்டத்துள்..


முடிவற்ற பாதையில்

தெளிவற்ற பயணமாய்

புரிந்தும் புரியாமலும்

புலம்பெயர் வாழ்வு..



Saturday 11 September 2010

அற்புத வார்த்தை ‘அம்மா’..


வெறுமையாய் த‌னிமைக்குள்

சுழ‌ல்கின்ற‌ ப‌ய‌ண‌ம்

அமைதிக்குள் தொலைந்துவிட‌

நினைக்கின்ற‌ ம‌ன‌ம்


இவைக‌ளை இய‌ல்பாய்

இணைக்கின்ற‌ கோடாய்

நின் புன்ன‌கையின் சாய‌ல்

நினைவுக‌ளில்-அன்னையே.


வாழ்க்கைப் பாதையில்

வலிமிகும் பொழுதுகளில்

ஏக்கங்கள் எழுந்து

எரிக்கின்ற வேளைகளில்


உணர்வுகள் உடைந்து

உயிர்சுடும் கணங்களில்

தாங்க முடியாமல்

தவிக்கும் தருணங்களில்


உணர்வற்ற ஜடமாய்

வார்த்தைகள் வடிந்து

வலியோடு வருமொரு

முனகல் ’அம்மா’


மெல்ல வலிகுறைந்து

கண்ணில் நீர் நிறைந்து

ஏக்கப் பெருமூச்சொன்று

எழுந்து அடங்கிவிட


மீண்டும் முன்புபோல்

முட்டி மோதியேனும்

முன்னேற வைக்கும்

உன்னத உணர்வு - அம்மா