Wednesday 28 January 2009

காதல் என்னும் கவிதை சொல்லடி...

காதல், ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி போன்றது. அந்த அழகான வண்ணத்துப் பூச்சி எப்போது எந்த மலரின் மேல் வந்து அமரும் என்று சொல்ல முடியாது? இன்னொரு வகையில் பார்த்தால், காதல் ஒரு வானவில் போன்றது. வானவில் எப்படித் திடீரெனத் தோன்றி வர்ணஜாலங்களைக் காட்டி எம்மையெல்லாம் சந்தோஷப்படுத்திவிட்டு மறைந்து விடுகிறதோ... காதலும் அப்படித்தான். ஆனாலும் காதலுக்கும் காதலிக்குமொரு உள்ளத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தான் போலும்??? காதலுக்கு வேறு சில விளக்கங்களும் இருக்கின்றன. காதல் வெங்காயம் போன்றது... வெளியில் அழகாக இருக்கும். உள்ளே (உரித்து) பார்த்தால் எதுவுமே இருக்காது... கண்ணீரில் தான் கொண்டுபோய் விடும்??? காதல் 'சுயிங்கம்' போன்றது. ஆரம்பத்தில் இனிக்கும். போகப்போக சப்பென்று போய்விடும். காதல் கழட்டிப்போட்ட செருப்பு மாதிரி. அளவாயிருந்தா மாட்டிக்கலாம்... இது ஒவ்வொருவரும் காதலை எப்படி எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.

ஒருவர் காதலில் விழுந்துவிட்டால் தன்னைச் சுற்றியுள்ளவற்றின் மீதான அவருடைய பார்வை முற்றிலும் மாறிவிடுகிறது. காதலின் தாக்கம் அவர்களை எப்படியெல்லாம் பாடுபடுத்துகிறது என்பதை எழுத்தில் வடிப்பது முடியாத காரியம். அவர்களை மட்டுமா...!!! சுற்றி இருப்பவர்களையும் அல்லவா...! காதல் அமைதியாகவே வருகிறது. அது வரும்போது எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களோ அறிவிப்புக்களோ மின்னல்களோ இல்லாமல்தான் வருகிறது. காதலென்பது இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் கவித்துவமான ஒரு சக்தி... காதல் ஒரு ஈர்ப்பு... அது சத்தியமானது... சுயஒழுக்கமானது... மறுக்க முடியாதது... சுதந்திரமானது... கட்டுப்படுத்த முடியாதது... காதலினால் எதை அடைய முடியும்??? மகிழ்ச்சி!!! (Happiness), ஆத்ம திருப்தி!!! (Satisfaction of the Soul), அனுபவம்!!! (Experience) இன்னும் சொல்லப் போனால் வலிகள்!!! (Pain) பெரும்பாலான சந்தர்ப்பங்களில்...!!! யாரோ ஒருவர் எங்களுக்காக அக்கறை எடுத்துக்கொள்கிறார் என்றோ எங்களைபற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றோ நாங்கள் உணர்கிற போது... காதல் என்பது நிச்சயமாக ஒரு உன்னதமான உணர்வுதான்... காதல் என்பது கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ எல்லோருக்கும் முக்கியமானது தான்...

காதலில் உங்கள் இணையின் நம்பிக்கைகள், விருப்பு வெறுப்புக்கள் வித்தியாசமான பழக்கவழக்கங்களை மதித்து நடவுங்கள். ஆழமான அர்த்தமுள்ள உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்மறையானவற்றைத் தவிர்த்து எப்பொழுதும் இணைந்து பயணிக்க முயற்சி செய்யுங்கள். காதலில் உங்கள் இணையின் மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சிக்கு இன்றியமையாதது... சிலர் காதலில் தோற்று(???) விட்டால், வாழ்க்கையே தொலைந்து போய்விட்டது போல் கவலைப்படுகின்றார்கள். உண்மையில் காதலென்பது வாழ்க்கையின் ஒரு அழகான அற்புதமான பகுதி மட்டுமே... காதலே வாழ்க்கையாகிவிடாது. காதலில் தோற்று விட்டோம் என்று கவலையோடு இடிந்து போய் உட்கார்ந்து விடுவது, கண்ணாடி பொம்மை உடைந்து விட்டதேயென்று சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் சின்னஞ்சிறிய குழந்தையின் செயலைப் போன்றது...

பெரியாருடைய பார்வையில்,
பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும். எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல...

சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளிலிருந்து,
ஒருமுறை நான் எனது சிறுபராயத்து தோழியைச் சந்தித்தேன். நாங்கள் ஒரு தடாகத்தின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவள் சிறிதளவு நீரை தன்னுடைய உள்ளங்கையில் நிரப்பி அதை எனக்கு முன்பாக நீட்டியபடியே சொன்னாள்... 'எனது கையில் தேங்கியுள்ள நீரை கவனமாகப் பாருங்கள். இது காதலை குறிப்புணர்த்துகிறது... உங்களுடைய கையை அக்கறையுடன் திறந்து வைத்து அதை அங்கேயே இருப்பதற்கு எவ்வளவு நீண்ட காலம் அனுமதிக்கிறீர்களோ, எப்பொழுதும் அது அங்கேயே இருக்கும். ஆனால், உங்கள் விரல்களை முழுவதுமாக மூடி அதை உங்களுடையதாக்க முயன்றீர்களானால், அது தான் கண்டுபிடிக்கிற முதல் இடைவெளியூடாக வெளியேறவே செய்யும்.


பெரும்பாலானவர்கள் காதலில் விடும் மிகப்பெரிய தவறு இதுதான். அவர்கள் அதை சொந்தமாக்கிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதிகாரம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்... எனவே காதல் உங்களை விட்டு விலகிப் போகிறது... காதல் சுதந்திரமானது... நீங்கள் அதனுடைய இயல்பை மாற்றமுடியாது... உங்கள் அன்புக்குரியவர்களை சுதந்திரமானவர்களாக இருக்க விடுங்கள். அள்ளிக் கொடுங்கள்... எதிர்பார்க்காதீர்கள்... அறிவுரை சொல்லுங்கள்... கட்டளை இடாதீர்கள்... அன்பாய் கேளுங்கள்... அதிகாரம் பண்ணாதீர்கள்... இயல்பாகவே நீங்கள் காதல் என்னும் கவிதையை உணர்ந்து கொள்வீர்கள்... ஆதலால் நண்பர்களே, காதலியுங்கள்... காதலிக்கப்படுங்கள்... இந்தப் பூமியையே காதலால் நிரப்புங்கள்...

Friday 23 January 2009

இயற்கை ஏன் இவ்வளவு அழகாய் இருக்கிறது...





























எனக்குத் தெரியவில்லை... தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்...

Thursday 22 January 2009

மரணத்தின் தேசம்

போரென்ற பேயொன்று பொங்கி எழுந்து வந்து
நாளும் பொழுதும் நரபலிகள் எடுப்பது
நாளை முடியுமென்ற நம்பிக்கையும் இல்லை

எட்டுத் திசைகளும் எதிரொலி எழுப்பும்
மரணித்து விழுபவர் மரண ஓலங்கள்
மறைந்து விடுமென்ற மயக்கமும் இல்லை

நாடிழந்து நகரிழந்து வீடிழந்து விதியென்று
காடுமிழந்து கடைசியாய் நாதியற்று நடுவீதியிலே
கொத்துக் கொத்தாக கோரமாய் கொலையுண்டு

பத்துப் பதினைந்தாய் நித்தமும் பலி கொடுத்து
வாழ்நாள் முழுவதும் வலியோடு வாழுகின்ற
தலைவிதியோ தமிழினமே தரணியிலே உனக்கு

முன்னொரு காலத்திலே மூத்த குடிகளாய்
தரணியிலே பரணிபாடி தலை நிமிர்ந்து வாழ்ந்தாலும்
இவைதான் இன்றெமது அடையாள சின்னமாய்

Wednesday 21 January 2009

பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க II

பிரபஞ்சம் பற்றிய முன்னைய பதிவுகளை பார்ப்பதற்கு இங்கே செல்லவும்...
பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க I

தொலை நோக்கிகள் (Telescopes)
எப்பிடியான தொலை நோக்கிகளை (Telescopes) வானியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துறாங்க என்ற விடயத்தை இந்த இடத்தில பார்ப்போம்...

வானொலி அலை தொலைநோக்கிகள் (Radio Wave Telescopes)
எங்களால் வானொலி அலைகளைக் கேட்க முடியாது. ஆனால் வானொலிக் கருவிகள் மின்காந்தக் கதிர்வீச்சுக்களை (Electromagnetic Radiation) ஒலிச்சக்தியாக மாற்றக்கூடிய வல்லமை உடையவை என்பதால் எம்மால் அவற்றைச் செவிமடுக்க முடியும்.


உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கி: Puerto Rico இல்
20 ஏக்கர் பரப்பளவில் 1000 அடிகள் குறுக்குவெட்டையும்
167 அடிகள் ஆழத்தையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
வானொலி தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
பால் வீதி நட்சத்திரத் தொகுதி. அம்புக்குறி சுட்டிக்
காட்டுவது சுப்பநோவா (Supernova)
அகச்சிவப்பு தொலைநோக்கிகள் (Infrared Telescopes)
எமது உடல் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெப்பமாகவே உணர்ந்துகொள்கிறது.

ஹாவாயிலுள்ள (Hawaii) அகச்சிவப்பு தொலைநோக்கி

அகச்சிவப்பு தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
வியாழனின் (Jupiter) மேற்பரப்பு
கட்புலனாகும் ஒளி தொலைநோக்கிகள் (Visible Light Telescopes)
பார்வையூடகமாக வளிமண்டலம் இல்லாத காரணத்தால் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பிடிக்கப்பட்ட படங்கள் புவிமேற்பரப்பிலிருந்து பிடிக்கப்பட்டவற்றை விடத் தெளிவாக உள்ளன.

ஹப்பிள் (Hubble) தொலைநோக்கி: விண்வெளியில்
மிதந்து கொண்டிருக்கும் ஒளி தொலைநோக்கி

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
நட்சத்திரத் தொகுதிகள் (Galaxies)
புறஊதா தொலைநோக்கிகள் (Ultraviolet Telescopes)
எமது வளிமண்டலம் புறஊதா கதிர்வீச்சுக்களை தடைசெய்வதனால் புறஊதா தொலைநோக்கி விண்வெளியிலேயே நிலைப்படுத்தப்பட வேண்டும்
விண்கலமொன்றிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
ஹொப்கின்ஸ் (Hopkins) புறஊதா தொலைநோக்கி


புறஊதா தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
சூரியனின் மேற்பரப்பிலுள்ள சுவாலைகள் (coronal loops)
X-கதிர் தொலைநோக்கிகள் (X-Ray Telescopes)

சந்ரா (Chandra) X-கதிர் தொலைநோக்கி

X-கதிர் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
கருந்துளை (black hole)
காமா கதிர் தொலைநோக்கிகள் (Gamma Ray Telescopes)
அணு வெடிப்புகளை/பிளவுகளை (Nuclear Explosions) போலவே நட்சத்திரங்களும் காமா கதிர்களை வெளிவிடுகின்றன.

Mt. Hopkins, அரிசோனாவிலுள்ள (Arizona) காமா கதிர் தொலைநோக்கி

காமா கதிர் தொலைநோக்கி மூலம் தொடராக படம் பிடிக்கப்பட்ட
நட்சத்திரமொன்றின் வெடிப்பு (sequence of an exploding star)


பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க I

இத பார்ர்த்துட்டு ஏதோ பிரபஞ்சம் போறாங்களாமே! நாமளும் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் எண்டு வந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. என்னட்ட பிரபஞ்சத்த சுத்திக் காட்ட மாயக்கம்பளமும் இல்லை. மந்திரக் கோலும் இல்லை. சும்மா ஒரு நாள் பிபிசி தமிழோசையில விண்வெளி பற்றி தகவல் ஒண்ட கேட்டுட்டு இணையத்துல போய் தேடுனா... பிரமிச்சு போனன். நான் தெரிஞ்சு கொண்ட விஷயங்கள ஒரு பதிவாக்குவமெண்டுதான் இதஎழுத தொடங்கியிருக்கிறன். ஒரு தடவயிலயே முழுவதையும் எழுதுனா...
‘ஒண்ணுமே புரியல, போடா புறம்போக்குன்னு’ போயிட்டே இருப்பீங்க. அதனால கொஞ்சம் நிதானமா, தெளிவா எழுதுவம்னு ஒரு ஐடியா...

இந்தப் பிரபஞ்சம் எப்பொழுது தோன்றியது, தற்போதய பிரபஞ்சத்தின் நிலையென்ன, எதிர் காலத்தில் பிரபஞ்சம் எப்படியிருக்கும் என்று கேட்டால் யாருக்குமே சரியாகத் தெரியாது. நீண்டகால அவதானிப்புகளின் விளைவாக பிரபஞ்சம் பற்றிய ஒருசில கருத்துருவங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, பிரபஞ்சம் என்பது தட்டையானதாகவே இருக்கவேண்டுமென்றும் அது சுமார் 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பெருவெடிப்பு (Big Bang ) ஒன்றின் மூலமாகவே உருவாகியிருக்க வேண்டும் என்றும் அதிலிருந்து தொடர்ச்சியாக விரிவடைந்து செல்கிறது என்றும் கருதப்படுகிறது. எதனால் இந்தப் பெருவெடிப்பு நிகழ்ந்தது என்பதற்கு இன்றைய விஞ்ஞானத்திடம் எந்தவிதமான விளக்கமும் இல்லை.

இப்பிரபஞ்சமானது 75% கருஞ்சக்தியையும் (Dark Energy), 21% கரும்பொருட்களையும் (Dark Matter), 4% சாதாரண பொருட்களையும் (Normal Matters / Stars, Gas, Rocks, etc) கொண்டதாக இருக்க வேண்டுமெனவும் கருதப்படுகிறது.


2MASS கணிப்பின்படி (Two-Micron All-Sky Survey) பிரபஞ்சம் 1.6 மில்லியன் (Million) நட்சத்திரத் தொகுதிகளை (Galaxies) உள்ளடக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரத் தொகுதிகள் ஒவ்வொன்றும் 100-400 பில்லியன் (Billion) நட்சத்திரங்களைக் கொண்டிருக்கலாம். இந்த நட்சத்திரத் தொகுதிகள் தமக்குள் சிலபல நட்சத்திரத் தொகுதிகளை சேர்த்துக்கொண்டு கொத்தணிகளாகவே (Clusters) உள்ளன. இக்கொத்தணிகள் 40/50 தொடக்கம் 10,000 வரையான நட்சத்திரத் தொகுதிகளை கொண்டிருக்கலாம். இக்கொத்தணிகளும் தமக்குள் ஒன்று சேர்ந்து விசேட கொத்தணிகளை (Super Clusters) அமைக்கின்றன. இவ்விசேடகொத்தணிகளில் டசின் (Dozen) வரையான கொத்தணிகள் இணைந்திருக்கலாம்.

அதுசரி, தம்மாதுண்டு பூமியிலருந்து இவ்ளோ பெரிய பிரபஞ்சத்தப் பற்றி எப்பிடி எல்லாம் கண்டுபிடிக்கிறாங்க எண்டு நீங்க யோசிக்கிறது விளங்குது. ஆரம்பத்துல எதுவுமே தெரியாம இருந்த மனிதன் பின்னால எப்பிடி இதையெல்லாம் படிப்படியா தெரிஞ்சு கொண்டான், நட்சத்திரத் தொகுதிகள் (Galaxies) என்றால் என்ன, பால் வீதி (Milky Way) என்றால் என்ன, எப்பிடியான தொலை நோக்கிகளை (Telescopes) இதுக்கு பயன்படுத்துறாங்க, பின்னால பிரபஞ்சத்துக்கு (Universe) என்ன நடக்கலாம் என்ற விடயங்களை இன்னொரு பதிவில சொல்றன்.

Monday 19 January 2009

கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக

கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும்
ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும்
உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ
கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான்

நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி
விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக
அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில்
கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக

Sunday 18 January 2009

சிறுமியும் இரயில் பயணியும்

அந்தச் சிறுமி தன் தாயுடன் வந்திருந்தாள். துறுதுறுவென்று அழகாயிருந்த முகத்தில் வறுமையின் சாயல் தெளிவாய்த் தெரிந்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள் அவர்களுடைய நிலையை முழுவதுமாய் உணர்த்தியது. அவள் தாய்க்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு நேரெதிரே இருந்த இருக்கையில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். வெள்ளை வேட்டி சட்டையில் பார்ப்பதற்குக் கம்பீரமாகவே தெரிந்தார்.

இப்பொழுது இரயில் மெதுவாக நகர ஆரம்பித்தது. சிறுமி ஜன்னலூடாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். மரங்களும் கட்டடங்களும் மிக வேகமாக பின்னோக்கி ஓடுவது அவளுக்கு வியப்பாய் இருந்தது. சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் மெதுவாக இருக்கையில் வந்து அமர்ந்தாள். அவளுக்குப் பசித்தது. தாயின் முகத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் எதுவும் கேட்கவில்லை. மெளனமாக இருந்தாள். அவளுக்குத் தெரியும், தன் பசியைப் போக்குவதற்கு தாயிடம் எதுவுமே இல்லையென்று. இருந்த சொற்பக் காசுக்கும் இரயில் டிக்கற் எடுத்துவிட்டார்கள்!

சிறிது நேரம் கழித்து முன்னால் இருந்த பெரியவர் தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தார். தான் கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து உணவுப் பொட்டலம் ஒன்றை எடுத்து தனக்கு அருகில் இருக்கையிலேயே வைத்து லாவகமாகப் பிரித்தார். சிறுமி இமை கொட்டாது பார்த்துக் கொண்டேயிருந்தாள். அந்தப் பொட்டலத்தில் நான்கு இட்லிகள் இருந்தன. அவளுக்குச் சந்தோசமாய் இருந்தது. அந்தப் பெரியவர் நிச்சயமாய் தனக்கும் ஒரு இட்லி தருவார்தானே!

பெரியவர் ஒரு இட்லியைக் கையில் எடுத்தார். சிறுமி ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பெரியவர் மெதுவாக சட்னியுடன் சேர்த்துச் சாப்பிடத் தொடங்கினார். சிறுமியின் முகத்தில் சிறிதளவும் மகிழ்ச்சி குறையவில்லை. அவர் சாப்பிட்டு முடியும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தாள். பெரியவர் முதலாவது இட்லியை முடித்துவிட்டு இன்னுமொரு இட்லியை எடுத்தார். மீண்டும் சிறுமி ஆவலுடன் பார்த்தாள். இம்முறையும் பெரியவர் ரசித்துச் சாப்பிடத் தொடங்கினார். மீண்டும் அவர் சாப்பிட்டு முடியும் வரை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தாள் சிறுமி. மூன்றாவது இட்லியை எடுத்தார் பெரியவர். அதையும் சாப்பிடத் தொடங்கினார். இப்பொழுது சிறுமியின் முகத்தில் முன்பைவிட மகிழ்ச்சி பொங்கியது. இன்னும் ஒரேயொரு இட்லிதான். அது தனக்குத்தான். அவள் நம்பிக்கையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். பெரியவர் மூன்றாவது இட்லியையும் முடித்துவிட்டு கடைசி இட்லியை எடுத்தார். சிறுமியின் கைகள் அதை வாங்குவதற்காக மெதுவாக உயர்ந்தன. பெரியவர் சாவகாசமாகச் சாப்பிடத் தொடங்கினார். உயர்ந்த கைகள் அப்படியே நின்றன. அவளுடைய பிஞ்சு முகம் இருண்டு போனது. அப்படியே விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தாள். அவளின் அடித்தொண்டையிலிருந்து முனகல் ஒன்று எழுந்து அப்படியே அமுங்கிப்போனது...

சாப்பிட்டு முடித்த பெரியவர் திருப்தியுடன் வயிற்றை தடவிவிட்டு பொட்டலம் கட்டி வந்த பேப்பரை கசக்கி ஜன்னலூடாக வெளியே எறிந்தார்...

பி.கு: இது நான் சிறு பையனாய் இருந்தபோது என்னுடைய அம்மா எனக்குச் சொன்ன கதை. சின்னவனாய் இருந்த என்னுடைய அடிமனதில் இது ஆழமாக பதிந்து விட்டது. பயணம் செய்யும் போது சாப்பிடவே கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. அது மற்றவர்களை பாதிக்காத வகையில் இருந்தால் நல்லது..

Friday 9 January 2009

படிக்க நினைத்தோம் படிப்பை தொலைத்தோம்

படிப்பு வேண்டாமென்று மூட்டை கட்டிவிட்டு
றோட்டில் நின்றோம் பழக்க தோசத்தில்
நண்பர்கள் சேர்ந்து நல்லதொரு முடிவெடுத்து
படிக்க சென்றோம் தனியார் கல்விநிலையம்

குறளி வித்தைகாட்டி கூஅடித்து கூட்டமாய்
வாங்குமேசை தட்டி வகுப்பை குழப்பி
பாடம் படிக்காமல் பின்வாங்கில் படுத்துறங்கி
நாங்கள் செய்த சேட்டைகள் கொஞ்சநஞ்சமல்ல

நாளும்பொழுதும் நாசமாய் போக
வாத்தி சொன்ன பாடம் வராமல் ஓடிவிட
பரீட்சை வருகுதென்று செவியில் விழுந்த செய்தி
பதறித் துடித்துப் படிக்க வைத்தது

விட்டுவிட்ட பாடத்தை எட்டிப் பிடிக்கவென்று
படிக்க தொடங்கி பாடத்தை கவனிக்க
புரிய தொடங்கியது பாடம் மட்டுமல்ல
படிக்காமல் விட்டுவிட்ட பகுதி பெரிதென்று

நண்பர்கள் சேர்ந்து நல்லா படிக்கவென்று
திட்டங்கள் போட்டு தொடங்கினோம் யுத்தம்
பிரத்தியேக வகுப்பு பிரமாதமாய் போக
நாட்டுவோம் வெற்றிக்கொடி நாங்கள் நம்பியிருக்க

புறப்பட்டது பூகம்பம் கலைந்தது கனவுகள்
வெற்றி நிச்சயம் கனவுகண்டோம் நாங்கள்
அதுவே பறித்தது அகதியானோம் நாம்
படிப்பை தொலைத்துவிட்டு மீண்டும் றோட்டில்

பேஸ்புக் பிரண்ட்ஷிப்

பேஸ்புக்கில் வந்தாள் பிரண்டு நானென்றாள்
சரியென்று சம்மதிக்க போய்விட்டாள் எங்கேயோ
என்னவென்று புரியாமல் நட்புக்கரம் நான் நீட்ட
திரும்பி வந்தாள் நீதானே அவன் என்றாள்

ஆம் என்று சொல்லி ஆரம்பித்த நட்பு
மெல்ல தவழ்ந்து மெதுவாய் நடந்தது
நாடு எது என்றேன் சோமாலியா நானென்றாள்
பயந்து நான் பதுங்க சிறீலங்கா தானென்றாள்

அப்பாவியாய் நினைத்து அன்பாய் கதைக்க
அப்பப்பா அவள் தொல்லை தாங்கமுடியவில்லை
என்னை பார்க்க பாவமாய் இருக்கென்றாள்
ஏனென்று கேட்கவில்லை எல்லாம் நேரமென்றேன்

அம்மா தாயே ஆளவிடு என்றேன்
மெண்டல் ஆக கொஞ்சம் இருக்கென்றாள்
பார்ப்போம் அதை இன்னொரு நாளென்றாள்
பசிக்குதென்று சொல்லி முடித்துவிட்டேன் சற்றை

இருக்கா கேர்ள்பிரண்ட் உனக்கென்று கேட்டாள்
சொல்லவில்லை என்றால் தேவையில்லை பிரண்ட்ஷிப்
போட்டு வாறன் என்று பொய்க்கோபம் கொண்டாள்
லூசா உனக்கென்று போட்டேன் மெசேஷ் ஒண்டு

மெசேஷ்கள் பரிமாறி மெல்லப் பிரண்டாகி
மீண்டும் வந்தாள் பேஸ்புக் பிரண்ட்லிஸ்டில்
நாளுக்குநாள் நட்பு பலமாகி நன்கு குளோசானோம்
கேட்டாள் ஒருநாள் என்னநினைத்தாய் என்னைப்பற்றி

நிறைய யோசித்து நிதானமாய் மெசேஷ் அடித்தேன்
பொங்கி எழுந்தாள் போய்விடு நீயென்றாள்
சொல்லிப் பார்த்தேன் புரியவில்லை அவளுக்கு
பெண்புத்தி பின்புத்தி சரிதானோ தெரியவில்லை

வைத்தியம் தெரியவில்லை பைத்தியம் தெளிய

நெருங்கி வந்தாய் அதிர்ந்து போனேன்
கடந்து சென்றாய் உடைந்து போனேன்
செல்ல பார்வைகள் சீண்டிய போது
தொலைந்து போனேன் தொலைதூர வெறுமைக்குள்

உன்னைக் கண்டதும் உருமாறி போனேன்
எனது கட்டுப்பாடு எல்லாம் இழந்தேன்
வேறொரு பிறவி வேகமாய் எடுத்தேன்
முகவரி இல்லாமல் முழுமையாய் மறைந்தேன்

காற்றில் கரைந்து காணாமல் போனேன்
உடலுக்குள் இல்லாத உணர்வை அடைந்தேன்
உடலுக்கு ஏதோ உண்மையாய் நடப்பதை
வெளியே இருந்து வேடிக்கை பார்த்தேன்

எண்ணம் கொண்டேன் உடனே மறந்தேன்
மீண்டும் தொடர்ந்தேன் மீளமுடியாமல் தவித்தேன்
உறங்க நினைத்தேன் உடனே எழுந்தேன்
நினைவு மறந்து நித்திரையில் விழுந்தேன்

இதயம் துடித்து வேறாய் உணர்ந்தேன்
இரத்தத்தில் நூறு அழுத்தங்கள் அறிந்தேன்
உடம்பில் வெப்பம் உணர்ந்து உறைந்தேன்
வலியை தாங்கும் வழிகள் மறந்தேன்

அப்படியும் என்னை இருக்க விடவில்லை
சொப்பனத்தில் வந்து சொக்குப் பொடிபோட்டு
பித்தனாக என்னை பிதற்ற வைக்கிறாய்
வைத்தியம் தெரியவில்லை பைத்தியம் தெளிய

கடந்து போன காதல் ஒன்று

பக்கத்து வீடுதான் பார்க்கவில்லை பலநாள்
திடீரென்று ஒருநாள் திகைத்தேன் உன்அழகில்
இடம்பெயர்ந்து வந்ததனால் இதுவரை தெரியவில்லை
இப்படியோர் அழகு பக்கத்தில் இருந்ததென்று

மெதுவாக தொடங்கிய மெல்லிய உணர்வொன்று
நாளான பொழுதில் பாடாய் படுத்தியது
பனியில் நனைந்த ரோஜாஇதழ் போல்
மனது சிலிர்த்து மகிழ்ச்சி கொண்டது

பார்வைகள் பரிமாறி தெளிவான போதும்
பேச முடியவில்லை பெண்ணே உன்னிடம்
ஆசைகள் எல்லாம் அறுந்துபோக அப்படியே
இடம்மாறி போய்விட்டேன் பார்க்க முடியவில்லை

நாட்கள் நகர்ந்து விரைந்தோடி மறைந்தன
என்ன ஆனாயென்று எனக்குத் தெரியவில்லை
சிலகாலம் கழித்து செய்தியொன்று கேட்டேன்
கடந்து போய்விட்டாய் கணவனுடன் என்று

என்று வரும் வசந்தம் என் வாழ்வில் மீண்டும்

என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ
தெரியவில்லை எனக்கு உன்னைப் பிரிவதென்றால்
உயிர்விட்டுப் போவதுபோல் வலியை உணர்கின்றேன்
என் செய்வேன் நான் ஏனிந்த நிலையெனக்கு

என் வீட்டு முற்றத்தில் தினந்தோறும் எழுந்து வந்து
ஆனந்தமாய் அனுபவிக்கும் இளங்காலை இனிமை
மஞ்சள் இளவெயிலின் தகதகக்கும் மோகனத்தில்
உணர்வழிந்து உறைந்துவிடும் மாலை மயக்கங்கள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

அழகான காலையிலே அவசரமாய் உணவுதேடி
பரபரப்பாய் பறந்து வந்து பாட்டிசைக்கும் புள்ளினங்கள்
பச்சை இலைகளிலே பதுங்கி ஒழிந்திருந்து
கதிரவன் வெளிப்படவே ஒளிவீசும் பனித்துளிகள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

கொத்து கொத்தாய் காய்காய்க்கும் முற்றத்து மாமரங்கள்
பழுத்து மணம் வீசும் பக்கத்து பலா மரங்கள்
மனதுக்கு மகிழ்வு தரும் தோட்டத்து பூஞ்செடிகள்
வேலியோரமானாலும் நட்டுவைத்த பனைமரங்கள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

காற்றுக்கு கதை சொல்லும் உயர்ந்த தென்னை மரம்
உச்சி வெயில் என்றாலும் குளிர்ச்சி தரும் வேப்ப மரம்
ஒல்லிக்குச்சி கிளையின் மீதே ஊஞ்சலாட புளிய மரம்
எக் காலம் என்றாலும் வற்றாத வாழை மரம்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

மாளிகை இல்லைதான் ஆனாலும் மனசுக்குள்
ஆர்ப்பரிக்க வைக்கின்ற அன்பால் நிறைந்த வீடு
நிலத்தில் பாய் விரித்து நீண்டதொரு கதை சொல்லி
நிம்மதியாய் உறங்குகின்ற நிஜமான வாழ்க்கை
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

அடுத்த வீட்டில் போய் ஆசையாய் கதைத்து வர
மூடிவைத்த வேலியிலே விரித்து வைத்த சிறுபொட்டு
அள்ளஅள்ள ஊற்றெடுக்கும் அகலமான கிணற்றுக்குள்ளே
பளிங்கு போல் ஜொலித்திடும் சுவையான தண்ணீர்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

கச்சிதமாய் வரப்பு வெட்டி மொத்தமாய் விரித்துவிட்ட
பச்சைவண்ண கம்பளங்கள் பச்சைபசும் வயல்வெளிகள்
செடி நட்டு நீரூற்றி வெருளி கட்டி காவல் வைத்து
பக்குவமாய் பராமரித்த காய்கறி தோட்டங்கள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

பாதையோரம் படர்ந்து பல வகை பூ பூத்து
விழி விரிய வைக்கும் அழகான பூங்கொடிகள்
ஆளில்லா வளவுக்குள் அதிசயமாய் வளர்ந்து
எச்சில் ஊற வைக்கும் இனிய கனி மரங்கள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

வரப்பு மேல் வழுக்காமல் வரிசையாய் வந்தமர்ந்து
வெட்டிக்கதை பல பேசி பறக்கவிட்ட பட்டங்கள்
நூலறுந்து போனதென்று வயலுக்குள் விழுந்தோடி
வாங்கிக்கட்டிக்கொண்டு திரும்பி வந்த பொழுதுகள்
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

விளையாட்டாய் நினைத்து வித்தைகள் பல காட்டி
சுறுசுறுப்பாய் பாய்ந்து வரும் சுட்டி நாய்க்குட்டி
காலைச்சுற்றி வந்து தலை தூக்கி முகம் பார்த்து
கொஞ்சி விளையாடும் கொள்ளைகொள்ளும் பூனைகுட்டி
என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும்

வளமான வாழ்க்கையை தொலைத்துவிட்டோம் நாங்கள்
பரதேசி போலவே அலைகின்றோம் தேசமெல்லாம்
என் இனியதேசமே என்று உன்னை காண்பேனோ
தெரியவில்லை எனக்கு ஆனாலும் ஒருநாள்
நிச்சயமாய் வருவேன் நிரந்தரமாய் உன்னிடம்
அன்றுதான் என் வாழ்வில் மீண்டும் வரும் வசந்தம்

அம்மா என்றொரு அழகான தேவதை

நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில்
நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம்
உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும்
எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும்

பாலூட்டி சோறூட்டி பாசமாய் வளர்த்தவளே
தாலாட்டி சீராட்டி தாங்கி வளர்த்தவளே
அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே
பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே

கத்தி அழுது தொண்டை வற்றி போனாலும்
கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும்
உன்னை கண்டுவிட்டால் உறங்கிவிட முடியுமென்று
சொல்லிக் கொடுக்காமல் புரிய வைத்தவளே

மெல்லத் துயில்கலைந்து விழிதிறந்து பார்த்து
உன்முகம் காணாது ஊர்கூட்டி வைத்தாலும்
பக்குவமாய் வந்து பாலூட்டித் தலைகோதி
முத்தமொன்று கொடுத்து இனிக்க வைத்தவளே

அதிகாலை எழுந்து அனைத்தும் செய்து
பள்ளிக்கு அனுப்ப பம்பரமாய் சுழன்று
திரும்பி வரும்போது திருப்தியாய் சமைத்து
படுக்க போகும்வரை பாடு பட்டவளே

எத்தனை கஷ்டத்திலும் என்னைப் படிக்கவைக்க
படாத பாடுபட்டு பரிதவித்த போதும்
உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து
உயர்த்தி வைத்து உச்சி குளிர்ந்தவளே

பல்கலை சென்று பட்டம் வாங்கினாலும்
விரிவுரைகள் முடிந்து வேலைக்கு சென்றாலும்
பச்சை குழந்தையாய் என்னை பாவித்து
குறையே இல்லா(த)மல் பாசம் வைத்தவளே

அம்மா என்று அழைத்தாலே போதும்
கவலைகள் எல்லாம் கரைந்து போகும்
கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தாலும்
அம்மா என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடங்கிவிடும்