Monday 15 February 2010

காதலர் தினத்தில் ஒரு காதல் பரிசு...


அலாரச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தேன். அசதியுடன் எழுந்து நேரத்தைப் பார்த்தேன். மணி ஐந்தரை என்றது கடிகாரம். எழும்ப மனமில்லை. எரிச்சலாய் உணர்ந்தேன். உலகமே இருட்டுப் போர்வைக்குள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் எழும்பித்தானாக வேண்டும். வேறு வழியில்லை. மெதுவாக எழுந்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைக்கு விழுந்தடித்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடத்தேவையில்லை. அண்ணாவுடன் வாகனத்தில் செல்லலாம். சற்றே நிம்மதியாக உணர்ந்தேன். அப்படியே பல் தேய்த்து முகம் கழுவி தயாரானபோதும், அண்ணா எழுந்திருக்கவில்லை. நேரம் போய்விட்டது. இனி அண்ணாவை எழுப்ப வேண்டியதுதான். ஏனோ தெரியவில்லை..! வழமைக்கு மாறாக, இன்று அண்ணாவை எழுப்புவது அவ்வளவு சுலபமாயில்லை. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அண்ணாவை எழுப்புவதில் வெற்றி கண்டேன். இருவருக்கும் தேநீர் தயாரித்து முடித்தபோது, அண்ணா போவதற்கு ஆயத்தமாக வந்துவிட்டார். தேநீரை அருந்திவிட்டு, வாசலைத் தாண்டி வெளியில் கால்வைத்தபோது உறைய வைக்கும் குளிர் உடம்பை ஊடுருவிச் சென்றது. கால் கையெல்லாம் மரத்துப் போனது. இன்னும் பதின்நான்கு மணித்தியாலங்கள் இந்தக் குளிரில்தான் வேலை என்று நினைத்தபோது, மீண்டும் வீட்டுக்குள் ஓடிவிடலாமா என்று எழுந்த எண்ணத்தை வலுக்கட்டாயமாக அடக்கிக்கொண்டு அண்ணாவுடன் கிளம்பினேன்.

இவ்வளவுக்கும், இன்று பெப்ரவரி 14, காதலர் தினம் என்பது சுத்தமாக மறந்து போயிருந்தது. நமக்குத்தான் யாரும் காதலி கிடையாதே...? பிறகு எப்படி ஞாபகம் வைத்திருப்பது..? அப்படியே வேலைக்கு வந்துவிட்டேன். அப்படியொன்றும் கவர்னர் வேலை கிடையாது. கடையொன்றில் எடுபிடி வேலை. கடையை (shutter) திறந்துவிட்டு பால், பாண் என்று ஒவ்வொன்றாக அடுக்கி முடித்து கடையை கூட்டி மொப் அடித்து ஒழுங்குபடுத்தி என்று வேலை சூடுபிடிக்கத்தொடங்கியது. தாங்கமுடியாத குளிர் என்றபோதும், வேலை ஒவ்வொன்றாக நடந்து கொண்டேயிருந்தது.

அப்போதுதான் , கடைக்கு வருவோர் போவோர் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துச் சொல்வதையும் காதலர் தின வாழ்த்து மடல் வாங்கிச் செல்வதையும் பார்த்தபோதுதான் இன்று காதலர்தினம் என்பது மண்டையில் உறைத்தது. ஓ..! இன்று காதலர் தினமா..? எனது கனவுக் காதலிக்கு கண்ணிமைக்குள் வாழ்த்துச் சொல்லிவிட்டு வேலையில் மூழ்கிப்போனேன். பத்து மணியாகிவிட்டது. பசிக்கத் தொடங்கியிருந்தது. பத்தரையளவில் கடை முதலாளியின் தயவில் கிடைக்கும் ஒரு துண்டு சாண்ட்விச்சை வெறித்தனமாய் முழுங்கிவிட்டு வேலையை தொடர்ந்தபோது கடையில் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. வேலையை அப்படியே விட்டுவிட்டு முன்பக்கமாக வந்து நின்றேன். எங்கள் கடைச்சூழலில் களவாணிப்பயல்கள் அதிகம் என்பதால் இந்த ஏற்பாடு. வழமைபோல் கடைக்குள் வந்து குரங்குக் கூத்தாடும் கூட்டங்களை, எருமைக்குப் பிறந்ததுகள் என்று திட்டித்தீர்த்தபடியே CCTV திரையில் ஒரு கண்ணை வைத்தபடி கூட்டத்தையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.

மெதுவாகக் கூட்டம் குறையத் தொடங்கியது. நான் என்னுடைய வேலைக்கு மீண்டும் செல்ல நினைத்தபோதுதான் அந்தப்பெண் தந்தையுடன் கடைக்குள் நுழைந்தாள். அழகாய் துறுதுறுவென்றிருந்தாள். நான் ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். கையில் அழகான கைப்பை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கடைக்குள் வந்ததும் தந்தையை விட்டுவிலகி நேரே மறுபக்கமாகச் சென்றாள். அவளுக்குப் பத்துப்பன்னிரண்டு வயதிருக்கலாம். தந்தை வீட்டுக்குத் தேவையான பொருட்களை எடுத்துவந்து அவற்றுக்குப் பணமும் செலுத்தி முடித்தபோதும் அவளைக்காணவில்லை. தந்தை அவளைக்கூப்பிட்டுப் பார்த்தபோது கடையின் மூலையிலிருந்து பதில் வந்தது. அவளைக்காணவில்லை.

சிறிது நேரங்கழித்தும் அவளைக்காணாததால் பொறுமையிழந்த தந்தை அவளை அழைத்தபடியே குரல் வந்த திசையை நோக்கிச் சென்றார். அவர் ஒருபக்கமாகச் செல்ல, மறுபக்கமாக வெளிப்பட்ட அந்தச் சின்னஞ்சிறிய பெண்ணின் கையில் அழகான விலையுயர்ந்த ஒரு சொக்லெட் பெட்டி இருந்தது. அதைத் தூக்கி மேசைமேல் வைத்துவிட்டு, இதுவரை தன் சின்னஞ்சிறிய விரல்களுக்குள் பொத்தி வைத்திருந்த சில்லரைகளை மேசைமேல் கொட்டினாள். அந்தச் சொக்லெட் பெட்டியை வாங்குவதற்குப் போதுமானதாக அந்தப் பணம் இல்லை. சிறிதளவு குறைவாக இருந்தது. நான் அந்தச் சின்னஞ்சிறிய பெண்ணின் பேராசையை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

அப்போது அவளின் தந்தை திரும்பி வந்தார். இவளோ தந்தை அந்தச் சொக்லெட் பெட்டியைப் பார்க்காதவாறு குறுக்கே நின்று மறைத்தாள். எனக்கோ எதுவும் புரியவில்லை. தந்தையிடம் சிறிதளவு பணம் தருமாறு கேட்டாள். அவளுடைய உதடுகள் துடித்தன. இயலாமை அவளுடைய முகத்தை விகாரப்படுத்தியது. அந்த அன்பான தந்தையோ எந்தவித கண்டிப்பும் இல்லாமல் அவள் கேட்ட பணத்தைக் கொடுத்தார். அவள் தந்தையை மறுபுறம் திரும்பி நிக்குமாறு சொன்னாள். அதன்பின் தந்தை தன்னைப் பார்க்கின்றாரா என திரும்பித் திரும்பி பார்த்தவாறே அவர் காணாதவாறு பணத்தைச் செலுத்திவிட்டு அந்தச் சொக்லெட் பெட்டியை எடுத்துத் தன்னுடைய கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள்.

எனக்கு மின்னல் வெட்டியதுபோல் எல்லாம் புரிந்துவிட்டது. அவள் அந்தச் சொக்லெட் பெட்டியை, காதலர் தினப்பரிசாக தனது தந்தைக்கும் தாய்க்கும் தர விரும்புகிறாள். அதை தந்தைக்குத் தெரியாமல் இரகசியமாக எடுத்துச்செல்ல விரும்புகிறாள் என்பது புரிந்தபோது அவளுடைய அந்த அன்பில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டேன். எனக்குள் ஏதோ இனம்புரியாத ஏக்கம்..! நாட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து பிரிந்துபோன என்னுடைய அன்னை என்கண்முன்னே வந்து நின்றாள்..! எனக்கு நீ என்ன தரப்போகிறாய் என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்..! என் கண்களில் நீர் திரையிட்டது. முன்னால் எதையோ தேடிக்கொண்டிருந்த வெள்ளையொன்று வித்தியாசமாய் நிமிர்ந்து பார்த்தது. சுதாரித்துக்கொண்ட நான், சினேகமாய் சிரித்துக்கொண்டே இன்று குளிர் கடுமையாய் இருக்கிறது என்று ஆங்கிலத்தில் சொன்னேன். கடுமையான குளிரில் இயல்பாகவே கண்ணில் நீர் வரும் என்பதால், அந்த வெள்ளை அதை ஆமோதித்துக்கொண்டே கெட்ட வார்த்தைகளால் குளிரை திட்டித் தீர்த்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தது.

நான் அந்தச் சின்னப்பெண் தன் தந்தையின் கையைப்பிடித்துக்கொண்டே துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டு செல்வதை இமைகொட்டாது பார்த்துக் கொண்டிருந்தேன், அவர்கள் என் கண்களிலிருந்து புள்ளியாகி மறையும்வரை...

Wednesday 10 February 2010

மறுஜென்மம் எடுத்து மறுபடியும் கரம்பிடிப்பேன்…



வெண்மணலில் தீட்டிய ஓவியம் போல

கண்ணசைவில் ஒரு காவியம் எழுதுகிறாய்

நதியில் வரும் புதுவெள்ளம் போல

இதழசைவில் ஒரு இலக்கியம் எழுதுகிறாய்


செவ்விதழ் இடுக்கில் சிறைப்பட்டிருக்கும்

மோகப் புன்னகையால் ஜாலம் செய்கிறாய்

அமுத கானமாய் அலைய வைக்கும்

காதல் பார்வையில் கவிதை எழுதுகிறாய்


கன்னத்தில் விழுந்து காற்றில் புரளும்

கருங்குழல் ஒதுக்கி நிருத்தம் பயில்கிறாய்

காந்தமாய் இழுக்கும் கருங்கயற் கண்களால்

மேடை இல்லாமல் நாடகம் நடத்துகிறாய்


மூடு பனிக்குள் முகிழ்ந்த முல்லையாய்

புத்தம் புதிய புராணம் எழுதுகிறாய்

யாரும் காணாத காட்டுத் தேனாக

முழுமதி இரவில் சிற்பமாய் ஜொலிக்கிறாய்


மாயக் கண்ணனின் மந்திர கானமாய்

கனவில் வந்து வசியம் செய்கிறாய்

அகில் புகையில் அனுதினம் குளித்த

அழகு தேவதையாய் கவர்ச்சி காட்டுகிறாய்


நின் பாதக்கமலம் பதிந்த இடங்களில்

பூமித்தாயே புல்லரித்துப் போவாள்

மனதை மயக்கும் மதுரப் பேச்சில்

வாயுதேவனே வாயடைத்துப் போவான்


அண்ட சராசரங்கள் ஆயிரங் கோடியிலும்

காண முடியாத கண்மணி நீயே

முப்பது கற்பங்கள் முடிந்து போனாலும்

மறுஜென்மம் எடுத்து மறுபடியும் கரம்பிடிப்பேன்


பி.கு: யுகங்கள் மொத்தம் நான்கு.
1. கிரேதயுகம் (34,56,000 வருடங்கள்)
2. திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)
3. துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
4. கலியுகம் (4,32,000 வருடங்கள்)

இந்த நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மகாயுகம். 71 மகாயுகம் கொண்டது ஒரு மனு. 14 மனு கொண்டது ஒரு கற்பம். ஒரு கற்பம் என்பது 429,40,80,000 ஆண்டுகள். இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாவது கற்பமான வாமதேவ கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான சுவதேவராக கற்பம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிந்து நாலாவது யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.

Thursday 4 February 2010

என்னுயிர் உறைந்திருக்கும்…


புதுமலரில் பட்டு

சிதறி விழும் பனித்துளிபோல்

என்மனதில் விழுந்து

எங்கேயோ தொலைந்துபோனாள்


மயக்கும் பார்வையில்

கிறங்கியபோது

உருக்கிய ஈயத்தை

ஊற்றிச் சென்றாள்


அன்புப் பேச்சில்

அகமகிழ்ந்தபோது

அதையே கூராக்கி

அடிநெஞ்சில் செருகினாள்


அவளே உலகமென்று

சுற்றினேன் முழுமதியாய்

அனுதினமும் என்னை

அனலிலிட்டு பொசுக்கினாள்


வற்றாத பாசத்தை

வரமாகக் கேட்டேன்

வலிகளை மொத்தமாய்

வாங்கிவந்து பரிசளித்தாள்


ஆண்டுகள் சென்றாலும்

வேண்டுமவள் தரிசனம்

ஆயுளின் அந்திவரை

அழியாது என்நேசம்


எரிந்த சாம்பலில்

உயிர்த்தெழும் சக்கரவாகமாய்

என்நேசம் என்றும்

உயிர்ப்புடன் இருக்கும்


ஊழிப் பிரளயத்தில்

உலகமே அழிந்தாலும்

என்னுயிர் அவளின்

நினைவில் உறைந்திருக்கும்

Wednesday 3 February 2010

தேவதையின் ஸ்பரிசம்...

அதிகாலை அமைதி

அன்னையின் அரவணைப்பு

அமைதியாய் தூங்கும்

சின்னக்குழந்தை

சிலிர்த்து போகிறேன்...


கண்ணிமைக்குள் மின்னல்

கலகலக்கும் சலங்கையொலி

மல்லிகை வாசம்

மயங்கி போகிறேன்...


கன்னத்தில் குழி

வெட்கச்சிரிப்பு

பட்டாம் பூச்சியாய்

படபடக்கும் இமைகள்

கிறங்கி போகிறேன்...


தினமும் காலையில்

தேவதையின் ஸ்பரிசம்

கனவில் மட்டும்...