Tuesday 20 March 2012

நானொரு விசார‌ணை கைதி...



த‌ர‌ணியில் வ‌ந்து

த‌மிழ‌னாய் பிற‌ந்த‌தால்

தேடப்படும் பொருளாகி

தெருநாயாய் அடிபட்டு

மரணத்தின் விளிம்பில்

மல்லாந்து படுத்திருந்தேன்

இர‌வோ ப‌க‌லோ

இன்ன‌தென்று தெரியாம‌ல்

க‌ண்க‌ள் க‌ட்டப்ப‌ட்டு

காணாம‌ல் போயிருந்தேன்‌



வேள்விக்கு நேர்ந்துவிட்ட‌

பாவ‌த்தின்‌ ப‌லிக்க‌டாவாய்

நான்கு சுவ‌ர்க‌ளுக்குள்

நாட்க‌ளை எண்ணுகிறேன்

முன்னும் பின்னும்

துப்பாக்கி முனைக‌ளில்

கைக‌ளில் வில‌ங்குட‌ன்

முழுநாளும் கிட‌க்கின்றேன்

க‌ண்க‌ளைக் கட்டிய‌

க‌றுப்புத் துணிக்குள்‌

ஏகாந்த‌ நிச‌ப்த‌த்தை

அமானுஷ்ய‌மாய் உண‌ர்கின்றேன்



எங்கேயோ கேட்ப‌தாய்

கால‌டிச் ச‌த்த‌ங்க‌ள்

ச‌ல‌ச‌ல‌த்து நெருங்கையில்

ஆயிர‌மாயிர‌ம் ஊசிமுனைக‌ளில்

விறைக்கிற‌து உட‌‌ல்

ச‌டுதியான‌ கேள்விக‌ளை

ச‌ர‌மாரியான‌ தாக்குத‌ல்க‌ளை

ச‌மாளித்து விடுகிற‌

வைராக்கிய‌த்தின் முடிவில்

விழிக‌ளின் ஓர‌ம்

கசிகிற‌ ஈர‌ம்

க‌ண்க‌ளை கட்டிய‌‌

க‌ருமையின் வெறுமைக்குள்

ஒட்டிக் கொள்கிற‌து



அடிவ‌யிற்றில் விழுகின்ற‌

ஐந்தாறு அடிக‌ளில்

சுவ‌ருட‌ன் சுருண்டுபோய்

முட்டிக் கொள்கிற‌

மூச்சுக் காற்று

வாய்வ‌ரை வ‌ந்து

வ‌லிக்கிற‌து மொத்த‌மும்

அப்பாவியாய் ம‌ன‌து

செத்துவிட‌ நினைக்கிற‌து

ச‌ப்பாத்துக் கால்க‌ளின்

க‌ன‌த்தை உண‌ர்கையில்

உருண்டு க‌விழ்கிற‌

உட‌ல் மொத்த‌மும்

பூகோள‌ உருண்டை

த‌ன்னையே சுழ‌ல்வ‌தாய்

ந‌ம்ப‌த் தொட‌ங்குகிற‌து



முதுகில் விழுகின்ற‌

மின்சார‌ தொடுத‌லில்

மூளை திற‌ந்து

துடிக்கிற‌து உயிர்

நாசியில் சுவாசிக்கிற‌

தீய்ந்த‌ வாச‌த்துட‌ன்

ஊழியின் முடிவாய்

வாய் கிழிய‌ க‌த்துகிறேன்

பெருங் குர‌லெடுத்து

இன்னும் இன்னுமாய்

ஆள‌ர‌வ‌ம‌ற்ற‌ அண்ட‌வெளிக‌ளில்

எங்கேயோ தொலைகிறேன்

அன்னையின் பாச‌ அழைத்த‌லை

அண்மையாய் எங்கோ உண‌ர்கிறேன்

எதுவும் புரியாத‌ அகால‌ இருட்டுக்குள்

அத‌ல‌ பாதாள‌த்துள் வேக‌ வேக‌மாய்

இன்னும் ஆழ‌மாய்..

No comments:

Post a Comment